Wednesday 8 July 2015

பேஸ்புக் மக்கள் ஆதரவைப் பெற காரணங்கள் என்ன?

ஒருவரே எக்காலத்திலும் கோலோச்சியதாக வரலாறே கிடையாது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு. அதே போல பல வருடங்களாகச் சக்கைப் போடு போட்ட யாஹூ நிறுவனம் உட்படப் பல நிறுவனங்களை உதாரணமாகக் சொல்லலாம்.ஃபேஸ்புக் நிறுவனம் கூகுளுக்குத் தலைவலியாகி வருவதைச் சமீப நிகழ்வுகள் உணர்த்தி வருகின்றன. நடைமுறை எதார்த்தம் என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஆரம்பத்தில் கூகுள் நிறுவனம் தேடியந்திரம் மூலமே தன்னை அறிமுகம் செய்து கொண்டது. பின்னர்த் தன்னுடைய தனி பண்புகளால் அடுத்தக் கட்டமான மின்னஞ்சல் துறையில் ஜிமெயிலாக நுழைந்தது. அதற்கப்புறம் YouTube நிறுவனத்தைக் கையகப்படுத்தி அதைப் பணம் காய்க்கும் மரமாக மாற்றியது. அதுக்குபிறகு கூகுளின் வளர்ச்சி அசுர வளர்ச்சி ஆகியது. Cloud Storage, Chrome Operating System, Google Map ஆகிய துறைகளில் தன்னை மேம்படுத்திக் கொண்டது. உலக மக்களின் ரசனை காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. நேற்று பரபரப்பாகப் பேசப்பட்ட விசயம் இன்று அனைவராலும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. ஒரு காலத்தில் கலக்கிய Orkut இன்று மூடப்பட்டு விட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

           மின்னஞ்சல் என்றாலே யாஹூ தான் என்ற நிலை மாறி இப்பொழுது ஜிமெயில் என்றாகியது. இப்பொழுதைய காலகட்டத்தில் மின்னஞ்சல் பயன்பாடும் குறைந்து வருகிறது. கூகுள் தன்னுடைய மற்ற சேவைகளில் கவனம் செலுத்திய அளவிற்குத் தன்னுடைய சமூகத்தளமான Orkut பற்றிக் கவலைப்படவில்லை. இந்த நேரத்தில் நுழைந்தது தான் ஃபேஸ்புக். தற்போது கூகுளை வந்துபார் என்று கேட்டு வருகிறது. இப்பொழுது மக்கள் சமூகத்தளங்களில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டனர். மக்களுக்கு ஒரே இடத்தில் சிரமமில்லாமல் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரிதே வருகிறது. ஒரு தளத்தின் சுட்டி (Link) இருந்தால் அதை க்ளிக் செய்து சென்று படிக்க யாரும் விரும்புவதில்லை. தளத்தை விட்டு நகராமல் அங்கேயே படிக்கும் படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து விட்டது. ட்விட்டர் போல சுருக்கமாகப் படித்து, ரசித்து, சிரித்து, கோபப்பட்டு, ஆச்சர்யப்பட்டு,அதிசயப்பட்டு நகருவதைத் தான் எல்லோரும் விரும்புகிறார்கள்.  சுட்டியை க்ளிக் செய்து வெளியே போக யாரும் விரும்புவதே இல்லை.அதனால்தான் சுட்டி பகிரும்போது கிடைக்கும் லைக்கையை விடச் சுருக்கமாகச் சுவாரசியமாக எழுதப்படும் நிலைத் தகவலுக்கு அதிக லைக் கிடைக்கிறது. ஒரு தளத்தில் நுழைந்தால் தனக்குத் தேவையான எல்லாமே அங்கேயே கிடைக்க வேண்டும் என்ற சிந்தனை மக்களிடையே வலுவாகிவிட்டது. இதற்குச் சமூகத்தளமான ஃபேஸ்புக் வசதியாக இருக்கிறது.

No comments:

Post a Comment